Monday, August 3, 2015

வாழைக்காய் காரக் கறி


தேவையானவை: வாழைக்காய் - 6,  பெரிய வெங்காயம் - 3,  பச்சை மிளகாய் - 5, தக்காளி - 1,  இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, தேங்காய் விழுது – கால் கப், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ள வேண்டும். வாழைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, ஆறியதும் எண்ணெயில் பொரித்து, தனியே வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். பச்சை மிளகாய்,  வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, நன்றாகக் கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, நன்கு கொதிக்கும் வரை கிளறி இறக்கும்போது, வாழைக்காயைச் சேர்க்கவும்.   
பலன்கள்: வாழைக்காயில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம். மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் சத்தும் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது. வைட்டமின் கே சிறிதளவு இருக்கிறது. அதிக உடல் எடை இருப்பவர்கள்  தவிர்க்க வேண்டும்.  சீரான இடைவெளியில் இந்த ரெசிப்பியை செய்து சாப்பிடலாம். உடலில் வலு கூடும். உடல் சூட்டைத் தணிக்கும். வாழைக்காயைவிடவும் வாழைப் பிஞ்சில் நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளன. வாழைக்காயைக் காயவைத்து மாவாக்கி, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  உடலுக்கு அதிக சக்தி தரும்.

No comments:

Post a Comment