Monday, June 29, 2015

மேத்தி தெப்லா


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப், 
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கப், 
புதினா - 1/4 கப், 
மிளகாய் தூள் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவைக்கு, 
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன். 

செய்முறை :

• புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். 

• 10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். 

• இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி, கல்லில் போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும். 

• சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.

Sunday, June 28, 2015

வாழைத்தண்டு பச்சடி


இளம் வாழைத்தண்டை சிறிது- சிறிதாக வட்ட வடிவில் நறுக்கி பின்னர் தீக்குச்சி வடிவில் வெட்டி எலுமிச்சை சாறு கலந்த நீரில்  போட்டு வைத்துவிட்டு முளைகட்டிய பாசிப்பருப்பு தேங்காய் துருவல் மிளகு சீரகத்தூள் சின்ன வெங்காயம் சேர்த்து எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு நீரில் உள்ள வாழைத்தண்டை எடுத்து பிழிந்து கலந்து கிளறி வைக்க வாழைத்தண்டு பச்சடி ரெடி.

வெந்தய கஞ்சி


அரிசி - 100 g
வெந்தயம் - 2 தேக்கரண்டி
 பூண்டு - 6 பல் 
தேங்காய் - 1 (தேங்காய் துறுவி கெட்டி பால் எடுக்கவும்) 
சீனி - தேவையான அளவு 

முதலில் அரிசியை கழுவி அதில் வெந்தயம், வெள்ளை பூண்டு தோல் நீக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி ஒரு மத்தால் கடைந்துகொள்ளவும். பின் அடுப்பில் வைத்து தேங்காய் பால் ஊற்றி கொதித்ததும் சீனி சேர்த்து இறக்கவும். குறிப்பு: இது இடியாப்பம்,ஆப்பம் எல்லாவற்றிற்க்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். வாய்ப்புண், குடல் புண்ணுக்கு மிகவும் நல்லது

ஓட்ஸ் டயட் ரொட்டி


ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தேவையான அளவு - உப்பு


ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடித்த ஓட்ஸ் மாவும் கோதுமை மாவும் 2:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து மூடி வைத்துவிட வேண்டும். 

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு எடுத்தால் டயட் ரொட்டி தயார்.

சத்து மாவு கஞ்சி


என்னென்ன தேவை?

சத்து மாவு - 2 ஸ்பூன் 
பால் - 1 டம்ளர் 
உப்பு - சிட்டிகை 
சர்க்கரை - தேவையான அளவு 

சத்து மாவிற்கு... 

கேழ்வரகு - 1 கப், 
கம்பு - 1 கப், 
சோளம் - 1 கப், 
கோதுமை - 1 கப், 
புழுங்கல் அரிசி - 1 கப், 
பார்லி - 1 கப், 
ஜவ்வரிசி - 1 கப், 
பச்சை பயறு - 1 கப், 
சோயா பீன்ஸ் - 1 கப், 
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப், 
கருப்பு சுண்டல் - 1 கப், 
மக்காச்சோளம் - 1 கப், 
வேர்க்கடலை - 1 கப், 
பொட்டுக்கடலை - 1 கப், 
முந்திரி - 100 கிராம், 
பாதாம் - 100 கிராம், 
ஏலக்காய் - 50 கிராம். 


எப்படிச் செய்வது?  

சத்து மாவு செய்வதற்கு... 

முதலில் சத்து மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு சுண்டல், மக்கா சோளம் போன்றவற்றை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைக்க வேண்டும். பின் அதனை ஒரு நாள் முழுவதும் காய வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை அது காயும் போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு மறுநாள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தால், முளைக்கட்டியிருக்கும். பின் அதனை வெளியே வெயிலில் போட்டு நன்கு உலர வைக்க வேண்டும், அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் உலர வைக்க வேண்டும். மறுநாள் அதனை ரைஸ் மில்லில் கொடுத்து நன்கு மென்மையாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். 

கஞ்சி செய்வதற்கு... 

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிப்பதற்குள், ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் சத்து மாவு போட்டு, அத்துடன் பால் சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் உள்ள தண்ணீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, அதில் கலந்து வைத்துள்ள சத்து மாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். சத்து மாவில் இருந்து பச்சை வாசனை போய், ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதனை இறக்கி அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்தால், சத்து மாவு கஞ்சி ரெடி!!!

சேமியா இட்லி


என்னென்ன தேவை? 
சேமியா - 2 கப், 
கோதுமை ரவை - 1 கப், 
தயிர் - 2 கப், 
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன், 
உப்பு - 1 1/2 டீஸ்பூன்.

தாளிக்க... 

கடுகு - 1/2 டீஸ்பூன், 
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், 
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - 5 இலைகள், 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன், 
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது? 

சேமியாவையும் கோதுமை ரவையையும் தனித்தனியே வறுத்துக்கொள்ளவும். ரவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சேமியா, பொடித்த ரவை, பேக்கிங் சோடா, உப்பு இவற்றை தயிருடன் சேர்த்து மாவாகக் கரைக்கவும். எண்ணெயில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

சம்பா ரவை உப்புமா


தேவையான பொருட்கள் : 

  • சம்பா ரவை - 1/2 கப், 
  • பச்சை பட்டாணி - 1/2 கப், 
  • கேரட் - 1 (நறுக்கியது), 
  • வெங்காயம் - 1 (நறுக்கியது), 
  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), 
  • இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது), 
  • கடுகு - 1/2 டீஸ்பூன், 
  • கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது), 
  • தண்ணீர் - 3 கப், 
  • எண்ணெய் - தேவையான அளவு, 
  • உப்பு - தேவையான அளவு. 
செய்முறை : 
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில்  ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். 

பின்பு துருவிய  இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1  கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல்  கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறினால், சம்பா ரவை உப்புமா ரெடி!!!

சில்லி சிக்கன்


தேவையான பொருட்கள் : 

சிக்கன் 
குடை மிளகாய் 
சோம்பு 
கறிவேப்பிலை 
வெங்காயம் - நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் 
எண்ணெய் - 1 குழிக்கரண்டி 
உப்பு 
ப.மிளகாய் - 6 முதல் 10 
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
மிளகு தூள் - 2 ஸ்பூன் 
மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
எலுமிச்சைப்பழம் - 1 
இஞ்சி - பொடியாக நறுக்கியது சிறிது 

செய்முறை : 

* கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். 

* குடைமிளகாய், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கி சிக்கன், உப்பு போட்டு வதக்கவும். 

* சிக்கன் வேக சிறிது தண்ணீர் சேர்க்கவும். 

*  கலர் மாறி சிக்கன் வெந்ததும் தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

* அடுத்ததாக பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி போட்டு கிளரவும். 

* பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும். 

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.  

கருப்பு உளுந்து சாதம்


தேவையான பொருட்கள் :

அரிசி - 1 கப் 
கருப்பு உளுந்து - அரை கப் 
வெந்தயம் - 1 தேக்கரண்டி 
தேங்காய் துருவல் - கால் கப் 
தோலுரித்த பூண்டு பல் - 20 
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி 
உப்பு  - தேவைக்கு 
கறிவேப்பிலை - தேவையான அளவு 

செய்முறை :

• உளுந்தையும், வெந்தயத்தையும் லேசாக வறுத்து கொள்ளுங்கள். 

• அதனை குக்கரில் போட்டு அதனுடன் நன்றாக கழுவி வைத்துள்ள அரிசி, பூண்டு, உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடுங்கள். 

• பின் தீயை குறைத்து மீண்டும் 2 விசில் வைத்து இறக்கி விடுங்கள். 

• வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும், தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை வதக்கி, உளுந்து சாதத்துடன் நன்கு கலந்து சுவையுங்கள். 

• உடலுக்கு தேவையான உன்னத சத்துக்களை இது தருவதால் வாரம் இருமுறை இதை தயார் செய்து சாப்பிடுங்கள்..

துவரம்பருப்பு பொடி


தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - 1 கப் 
கடலைபருப்பு - 1 தேக்கரண்டி 
மிளகு - 1 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
காய்ந்த மிளகாய் - 6 
பூண்டு - 50 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி 

செய்முறை :

• வாணலியில் துவரம்பருப்பு. கடலைபருப்பை நன்கு வறுத்து கொள்ளவும். 

• மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் போன்றவற்றையும் அத்துடன் சேர்த்து வறுங்கள். 

• பூண்டுடை தோலுடன் வறுத்து ஆறியதும் தோலை உரித்து விடுங்கள். 

• பருப்பு ஆறிய பின்பு மிக்சியில் இட்டு பொடி செய்து, பூண்டையும் கலந்து அரைத்து உப்பு, பெருங்காயத்தூள் கலந்து கொள்ளுங்கள். 

• இது பருப்பு பொடி. இதை சூடான சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டால் சுவையோடு ஆரோக்கியம் கிடைக்கும்.

முள்ளங்கி சப்பாத்தி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - அரை கப்
துருவிய முள்ளங்கி - அரை கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - சிறிதளவு     
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி     
எண்ணெய் - 3 தேக்கரண்டி     
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை

* மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முள்ளங்கியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், உப்பு போட்டு 30 நொடிகள் வதக்கவும்.

* அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவில் ஒரு எலுமிச்சை அளவு எடுத்து வட்டமாக தேய்த்து, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைக்கவும்.

* மசாலா வெளியில் வராதபடி மடித்துக் கொள்ளவும். மடித்த சப்பாத்தியை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் சப்பாத்தியைப் போட்டு மேலே எண்ணெய் ஊற்றி, இருபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார்.

உடல் ஆரோக்கியத்திற்கு முள்ளங்கி மிகவும் நல்லது. குழந்தைகள் முள்ளங்கியை அதிகம் விரும்ப மாட்டார்கள் இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.